Saturday, August 18, 2012

வலீமா புறக்கணிப்பு சரியா...?

4 கருத்துக்கள்
இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய வலீமா என்ற ஒரு கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி வலிமாவை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?

சிலர்,  ஒரு திருமணத்தில்  பித்அத் இருந்தால் வலீமாவை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளனர்..!

திருமண விருந்து(வலீமா):
'நிக்காஹ்க்குப்பின் மணமகன் வழங்கும் விருந்துதான் வலீமா எனப்படுகின்றது' என்பதை நாம் அறிவோம்.

இந்த விருந்து நபிவழியாகும். ஏனெனில், இதுபற்றி குர்ஆனில் எந்த குறிப்பும் நான் பார்க்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவரகள் மார்க்கமாக நமக்கு வலியுறுத்தியதும் வஹிதான் -- இறைக்கட்டளை தான் என்பதையும் நாம் அறிவோம்..! அவ்வகையில் வலீமா என்பது இறைவழிகாட்டல்..!

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப்பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை. இன்று அப்படி பெண்வீட்டார்... "நானும் விருந்து போடுவேன்" என்று போட்டால்... அது சாதா விருந்துதானே அன்றி இஸ்லாம் கூறும் வலீமா விருந்து அல்ல..! வலிமாவிற்கான நன்மை கிடையாது..! காரணம் நபி (ஸல்) அவர்கள் மணமகனைத்தான் விருந்து போட சொன்னார்கள்..!

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வசதிக்கு அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். 

நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து கொடு!” என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் ரலி... அவர்களிடம் சொன்னதால்... ஒரு ஆட்டுக்குமேலே அதிகமாக அறுக்கலாம் என்றும் இதிலிருந்து புரியலாம்..! விருந்தில் 'எளிமை' என்று சொல்பவர்கள்... எத்தனை ஆடு அறுத்தால் அது எளிமை.... எத்தனை ஆட்டுக்கு மேலே அறுத்தால் 'அது எளிமை அல்ல' என்ற அளவை எல்லாம் கூற வேண்டும்...!

மேலும், நபி அவர்களின் வலிமாவுக்கு... நபி(ஸல்) குறிப்பிட்டு சொன்னவர்களையும் மற்றும் தான் சந்தித்த அனைவரையும் ஹனஸ் (ரலி) அழைக்கிறார்கள்.
.
நபி(ஸல்..) அவர்கள் கேட்கிறார்கள்."எத்தனை பேர் விருந்துண்டார்கள்" என்று, "சுமார் முன்னூறு பேர்" என்கிறார்கள் ஹனஸ் (ரலி) 


சஹீ முஸ்லிமில் நீளமாக வரும்  2803 முஸ்லிம் ஹதீஸில் முன்னூறு பேரை நபி ஸல்.. அவர்கள் அழைத்து உள்ளார்கள்.... (அல்லது அனஸ் ரலி... அவர்கள் 300 பேரை தம் வலிமாவுக்கு அழைத்ததை ஏற்றுக்கொண்டார்கள்... தடை ஏதும் போட வில்லை...கடிந்து கொள்ளவும் இல்லை...) "பத்து பேர்.. ஐம்பது பேர்தான் எளிமை" என்பவர்கள்... "இந்த 300ஐ எளிமை இல்லை" என்பார்களா.,..???

மணவிருந்துக்கோ, மற்ற விருந்துக்கோ அழைக்கப்பட்டவர் அதை ஏற்றுச் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2810)

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. காட்டினால் அது கெட்ட வலீமா. இங்கே... "அந்த 'கெட்ட வலிமா'வை ஏழைகள் அழைக்கப்படாததால் செல்வந்தர்கள் அந்த வலீமா புறக்கணிக்கவேண்டும்" என்று நபி ஸல்...அவர்களால் சொல்லப்பட வில்லை..! வலிமாவை புறக்கணிப்பதில் முழுமூச்சாக இருப்போர் எவரும் இந்த காரணத்துக்காக எல்லாம் புறக்கணித்ததும் இல்லை..! :-)))

சஹீ புஹாரி - பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5179
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இந்த (மண) விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (‘நஃபில்’ எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள்.
.
ஆக வலீமா எந்த அளவுக்கு என்றால்... ஒரு நஃபில் நோன்பை முறித்து செல்வது கூட கூடும் என்று உமர் (ரலி) அவர்களின் மகன் சஹாபி அப்துல்லாஹ் (ரலி) புரிந்து வைத்து இருந்திருக்கிறார்கள். அதாவது, "ஒரு நஃபீலை காட்டிலும் சுன்னத் நன்மைகளில் மேலானது" என்ற அடிப்படையில். (இவர் எப்படி என்றால், தன் தந்தை கலீஃபா உமர் ரலி ஆயினும், அவர் தமத்து ஹஜ் பற்றிய ஒரு ஹதீஸுக்கு மாறான கட்டளைக்கு கட்டுப்படாமல், நான் ரசூளுல்லாஹ்வை மட்டுமே பின்பற்றுவேன்... என்று தமத்து ஹஜ் செய்த ரொம்ப ஸ்ட்ராங்கான சஹாபி).
.
சஹீ புஹாரி - பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5072
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரி(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களுக்கு இரண்டு துணைவியர் இருந்தனர். எனவே ஸஅத்(ரலி) தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!” என்று கூறினார்கள்.

(அதாவது, செல்வம் மற்றும் மனைவி ஆகிய எதுவும் வேண்டாம். என மறுத்து விட்டார்)

பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, ‘என்ன இது அப்துர் ரஹ்மானே?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான்(ரலி), ‘நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்தேன்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?’ என்று கேட்க, ‘ஒரு பேரிச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து கொடு!” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் பேரருளால் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி..) மதினாவின் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார் என்பதெல்லாம் அப்புறம்தான்...! ஆனால், ஆட்டை அறுத்து விருந்து கொடுக்க சொல்லப்பட்ட போது அவர் 'என்ன நிலையில்' இருந்தார் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. வீசின கை வெறுங்கையோடு மதினா வந்து 'அ'-னாவிளிருந்து துவக்கிய வியாபாரம். சில நாட்களில்  மஹருக்கான பொன்னை சேர்த்து இருக்கிறார். உடன் திருமணம் செய்து இருக்கிறார். அதாவது, அதுதான் அவரின் பொருளாதார ஸ்டார்டிங் ஸ்டேஜ்.  அதே ஊரில் உள்ள நபி (ஸல்) அவர்களிடம் கூட சொல்லாமல் திருமணத்தை சிக்கனமாக குறைந்த செலவில் முடித்து இருக்கிறார். அதைக்கூட ஏன்  என்று கேட்கவில்லை நபி (ஸல்) அவர்கள். 'ஒரு ஆட்டையாவது அறு. வலீமா போடு' என்றார்கள்.

"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும் " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."என்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும்  அஹ்மத்- 23388 ஹதீசை எளிமைக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

எந்த எளிமைக்கு,,,? வலிமாவுக்கு..! இது சரியா,,? பொற்குவியலே தருவது தவறில்லை என்று அல்லாஹ் சொல்லி இருக்க...மஹரில் நம்மால் எளிமையை நிர்பந்திக்க முடியுமா...?

அதாவது, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஆட்டு விருந்துக்கு... மாட்டேன் என... 'எளிமை'யை காரணம் சொல்ல வில்லையே ஏன்..?

நபி(ஸல்) அவர்களே கூட ஆட்டை அறுத்து விருந்து போட்டு உள்ளார்களே..? 'எளிமை' தெரியாததாலா..? அப்போதும் பேரிச்சம் பழம்... கோதுமை மாவு... தந்திருந்தால் அது இன்னும் எளிமையாக இருந்திருக்குமே..?

ஆக...... எதில் எளிமை வேண்டும்..?

வெட்டி செலவுகளை... மணமக்களின்  உடையிலும்... பெண்ணின் ஆபரனங்களிலும்... மேளம் கொட்டு.. வீட்டு  அலங்காரம் இவற்றில் குறைத்துக்கொள்ள வேண்டும்..!

இப்படியாக,,,, நாம் எளிமை எதில் வேண்டும் என்று அது குறித்து சிந்திக்க வேண்டும் சகோ..!


அடுத்து வரும் ஒரு ஹதீஸ் மணமகன் அழைத்த வலிமாவை மறுத்து... புறக்கணித்து... அல்லாஹ்வுக்கும் தூதருக்கு மாறு செய்ததவர்களில் கொண்டு போய் நம்மை சேர்க்கிறது. 
சஹீ புஹாரி - பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5177 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மணவிருந்து உணவே... உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது என்றும்,  யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளதை பார்த்தோம்..!

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். (58:22)

நபி (ஸல்) அவர்கள்,,,,,,,
வெள்ளிப்பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும், ‘மைஸரா’ எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, தடித்தபட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். 

விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க் (சிலைகள், உருவப்பட திரைச்சீலைகள்) மற்றும் ஹராமாக்கப்பட்ட (பட்டு துணியால் சுவர் அலங்கரிப்புகள், உட்காரும் விரிப்புகள் திண்டுகள்) காரியங்கள் இருந்தால்.... நபி ஸல்... அவர்கள் 'அவை இருக்கும் வரை வரமாட்டேன்' என்று கூறி விருந்தை புறக்கணித்து எழுந்து சென்றார்கள்.

இது எதை காட்டுகிறது...? ஷிர்க் அல்லது ஹராம்.... இவற்றை ஏற்றுத்தான் வலீமா சாப்பிட வேண்டும் என்று இல்லை..! அப்படி இருந்தால் புறக்கணிக்க வேண்டும்...!
மேலும், அந்த வலீமா உணவில் கூட ஹராமான இறைச்சி... அல்லது ஹராமான உணவு, அல்லது வெள்ளி தட்டில் வலீமா உணவு... வைத்து பட்டு கம்பளம் விரித்து... பட்டால் வலீமா விருந்து நடக்கும் அறை சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு... பரிமாறப்பட்டலோ... சாப்பிட வேண்டுமா... புறக்கணிக்க வேண்டுமா..? 
புறக்கணிக்க வேண்டும்..! இதற்கு ஆதாரம் உள்ளது..!

ஆனால்,

ஒரு பித்அத் துவா ஓதினால் வலிமாவை புறக்கணிக்கலாம்,
ஆடம்பர மாலை போட்டால் வலிமாவை புறக்கணிக்கலாம்,
ஆடம்பரமாக  பைத்துசாபா கச்சேரி வைத்தால்...

இப்படி புறக்கணித்து அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மாறு செய்யலாம்....
-------என்றெல்லாம் கூறுவோர்,
.........இதற்கு ஆதாரம் வைக்க வேண்டும்...!

ஆகவே...
திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...? 
நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..?
இத்தோடு சேர்த்து... இந்த மூன்று பதிவிலும் சேர்த்து.....
நான் சொல்வது என்னவென்றால்...

பித்அத்களை நாம் புறக்கணிக்க வேண்டும்...
ஆடம்பரங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்..

இவற்றை காரணம் காட்டி அது இருப்பதால்...
அவை இல்லாத.... அவை கலக்காத... நிக்காஹ்வையும் வலிமாவையும் எப்படி நம்மால் புறக்கணிக்க முடியும்..???


ஆடம்பரம்+பித்அத்+நிக்காஹ்+வலீமா = திருமணம்

இவற்றில்....

ஆடம்பரம் மற்றும் பித்அத் களை புறக்கணியுங்கள்...!  
அப்படி புறக்கணித்தால்  நமக்கு அது நன்மை..!

நிக்காஹ்வையும் வலிமாவையும் புறக்கணிக்காதீர்கள்...!  
மீறி புறக்கணித்தால் நமக்கு அது பாவம்..!

இதொன்றும்  நாம் செய்யாதது அல்ல..! தினசரி செய்வதுதான்..! தொழுகையில் நபிவழிக்கு முரணாக பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றி தொழத்தான் செய்கிறோம்..! ஆனால், எது பித்அத்தோ... அதை மட்டும் விட்டுவிட்டு... நாம் சுன்னாவை பின்பற்றியவர்களாக பர்ளான.. சுன்னத்தான.. ஜமாஅத் தொழுகைகளை அதே இமாமை பின்பற்றி தொழுது முடிக்கிறோம்..! பித்அத் களை காரணம் காட்டி ஒட்டு மொத்தாமாக ஜமாஅத் தொழுகையை புறக்கணிப்பதில்லையே..!? அல்லது பள்ளிவாசல் ஆடம்பரமாக கட்டி இருக்காங்க என்று தொழுகையை புறக்கணிப்பதில்லையே..! இதே நிலைப்பாடுதானே நிக்காஹ்/வலீமா விஷயத்தில் எடுக்க சொல்கிறேன்..?


இதுதான் சகோ. நான் சொல்ல வருவது..!


ஆனால்... இன்று.... சிலர்.... "முஸ்லிம்கள் திருமணத்தில் ஆடம்பரம் பித்அத் கள் ஒழிய வேண்டும்" என்ற நல்ல நோக்கத்துக்காக...அல்லாஹ் மற்றும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை  -- நாம் கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்ட நிக்காஹ் & வலீமா ஆகியவற்றை.... (பித்அத்&ஆடம்பரம் இவற்றோடு சேர்த்தே ஒட்டுமொத்தமாக) புறக்கணித்து விட்டு பாடுபடுகிறார்கள்..! இதற்கு எந்த ஆதாரமும் இல்லை...!  

இதுதான் சகோ. நான் சொல்ல வந்தது..!

4 கருத்துக்கள்:

  • August 18, 2012 at 6:46 PM

    இந்த போஸ்டுக்கு தக்க எதிர்கருத்து இருந்தால்... அதை இங்கே எவரும் இடலாம்..! அக்கருத்து குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியாக இருந்தால்... அதை ஏற்கும் முதல் ஆள் இன்ஷாஅல்லாஹ்... நானாகவே இருப்பேன்..! அடுத்தநிமிஷம் இந்த பதிவை தூக்கவும் தயார்..!

  • January 13, 2013 at 2:44 PM

    //ஆனால்... இன்று.... சிலர்.... "முஸ்லிம்கள் திருமணத்தில் ஆடம்பரம் பித்அத் கள் ஒழிய வேண்டும்" என்ற நல்ல நோக்கத்துக்காக...அல்லாஹ் மற்றும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை -- நாம் கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்ட நிக்காஹ் & வலீமா ஆகியவற்றை.... (பித்அத்&ஆடம்பரம் இவற்றோடு சேர்த்தே ஒட்டுமொத்தமாக) புறக்கணித்து விட்டு பாடுபடுகிறார்கள்..! இதற்கு எந்த ஆதாரமும் இல்லை...! //

    4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.

  • April 22, 2013 at 8:09 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்

    அன்பானவர்களே

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரீனர்கள் எவன் மாற்று மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறானோ அவன் என்னை சார்தவன் அல்லன் .

    என்று அல்லாஹுவுடைய தூதர் சொல்லுகிறார்கள் , அப்படி இருக்கையில் நபிகள் நாயகம் கட்டி தராத வழிமுறையில் நடக்ககூடிய திருமணத்தில் நாம் எப்படி காலத்து கொள்ளலாம்.


    முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஒரு திருமணத்தில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அது அல்லாஹ்ஹுவும் அவனுடைய தூதரும் காட்டி தந்த வலி முறையில் அமைய வேண்டும். அல்லாமல் பூமாலை இடுவது பெரிய குற்றமா என்று கேட்டால் அது சரி இல்லை. பூமாலை இடுவது நபிகள் நாயகத்தின் கலாச்சாரம் இல்லை, அது மாற்று மதத்தவரின் கலாச்சாரம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரீனர்கள் எவன் மாற்று மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறானோ அவன் என்னை சார்தவன் அல்லன் .


    அப்படி இருக்கையில் நம்மை சாரதவுனுடைய திருமணத்தில் நீங்கள் எப்படி கலந்து கொள்வீர்கள்.


    RasoolAllah [May Allah bless Him and grant Him peace] stated: "On the Day of Judgement, some people will come to me when I will be standing by Haudh-e-Kauser (Well). They will be grabbed and taken towards the Hellfire. I shall say: "These are my people" but in reply I will be told: "These are the people who introduced innovations after you, so they are unbelievers."

    [Bukhari & Muslim, Kitaab-ul-Haudh]


    RasoolAllah [May Allah bless Him and grant Him peace] stated: "Every innovation leads astray and every creator of the astray goes in the Fire."

    [Muslim chapter Al-jumah]

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!